சென்னை நகரில் 12 மாதங்களில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் ரூ. 13 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் சார்பில் தெரிவித்துள்ளனர்.
தமிழக போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு போலீசார் அவ்வப்போது கிடைக்கும் ரகசிய தகவலின் பேரில் அதிரடி ரெய்டு நடத்தி அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பாக 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் நைஜீரியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த நபர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் வரை 12 மாதங்களில் 700 கிலோ கஞ்சாவும், 4 கிலோ மெத்தப்டமைனும் சிக்கியுள்ளது. அது தவிர எல்.எஸ்.டி போதைப்பொருள் 4.39 கிராம், 2.5 கிலோ சாரஸ் ரக போதைப்பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் போதைப்பொருள் கடத்த பயன்படுத்தப்பட்ட 3 லாரிகளை போலீசார் மீட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட 65 பேர்களில் பதிமூன்று பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.