நமது சிறப்பு நிருபர்
மோசடிகள் பல விதம். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். வங்கியில் இருந்து மேனேஜர் பேசுவது போல பேசி ஆதார்கார்டு, ஏடிஎம் கார்டு, ஓடிபி எண்களை தெரிந்து கொண்டு ஆன்லைனில் பணத்தை அள்ளுவது நம்மூர் மோசடி. ஆனால் அதைவிட பல படிகள் மேலே போய் டெக்னாலஜியை பயன்படுத்தி பல கோடிகளை அள்ளுவது நைஜீரிய ஆன்லைன் மாயாவிகளின் லேட்டஸ்ட் டெக்னாலஜி. அது தொடர்பாக ஒரு புகார் தொடர்பாக சென்னை அடையாறு சைபர்கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போதுதான் இந்த நுாதன முறையிலான மோசடி வெளிவந்துள்ளது. அப்படி என்ன மோசடி அது….. விவரிக்கின்றனர் அடையாறு சைபர்கிரைம் காவல்துறை தனிப்படை.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த மோகன் பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். கடந்த 22ம் தேதியன்று சென்னை அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமனை சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருந்ததாவது, ‘‘ஆன்லைன் பண விவகாரம் தொடர்பாக என்னை சிலர் கடத்தி சிலர் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். என்னையும் என் குடும்பத்தையும் கொலை செய்வதாக மிரட்டல் விடுக்கும் அவர்களிடம் ரூ. 15 லட்சம் கொடுத்து விட்டேன். மேற்கொண்டு பணம் கேட்டு மிரட்டுகின்றனர்’’ இதுதான் அவர் அளித்த புகார் மனு. அந்த புகாரை கூர்ந்து கேட்ட துணைக்கமிஷனர் விக்ரமன் உடனடியாக அது தொடர்பாக அதிரடி ஆக்சனில் இறங்கினார்.
அடையாறு சைபர்கிரைம் தனிப்படை எஸ்ஐ மகராஜன் மற்றும் தலைமைக்காவலர்கள் இந்திராணி உள்ளிட்டோர் விசாரணைக்களத்தில் இறங்கினர். குற்றவாளிகளின் செல்போன் சிக்னலை வைத்து சோதனை செய்ததில் அவர்கள் சென்னை தி.நகரில் தனியார் லாட்ஜில் தங்கியிருப்பது தெரியவந்தது. பணம் பறித்த அந்த பலே ஆசாமிகள் பிரபாகரன், பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ரமேஷ் ரெட்டி ஆகிய இருவரையும் அங்கே சென்று மடக்கிப் பிடித்து அடையாறு காவல் நிலையம் அழைத்து வந்தனர். இருவரும் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தியாவில் பேடிஎம், கூகுள்பே போன்று வெளிநாடுகளில் swift global pay, instant merchant pay போன்ற செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. அதில் இந்திய மதிப்பில் ரூ. 34 கோடி மதிப்பில், 45 லட்சம் டாலர் உள்ள வாலட் ஒருவர் கணக்கில் உள்ளதாகவும், அந்த வெளிநாட்டு பணத்தை எடுக்க முடியாமல் இருப்பதால் அந்த பணத்தை எடுத்துக் கொடுப்பதற்கு உதவினால் அதற்கு தகுந்த கமிஷனைப் பெற்றுத்தருவதாகவும் பிரபாகரனும், ரமேஷ் ரெட்டியும் மோகனை நம்ப வைத்து ஆசை வார்த்தை காட்டியுள்ளனர். இந்த பணத்தை வெளிநாட்டு நண்பர்கள் அதிகம் உள்ளவர்கள், swift global pay என்ற இணையதளத்தில் கணக்கு ஆரம்பித்து, பிட்காயின்களை கொடுத்து அந்த வாலட் கணக்கை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். தாங்கள் அந்த அக்கவுண்ட்டை வாங்கியுள்ளதாகவும், அதை வெளிநாட்டு நண்பர்கள் உள்ள மோகன் swift global pay மற்றும் instant merchant pay என்ற பணபரிவர்த்தனை இணையதளத்தில் கணக்கு துவங்கினால், அந்த 45 லட்சம் டாலர் பணத்தை வரிப்பிரச்சனை இல்லாமல் எடுத்துவிடலாம் என்று கூறி நம்ப வைத்துள்ளனர். இதை நம்பிய மோகன் 5 பிட் காயின்களை முதலீடு செய்து அந்த அக்கவுண்டை விலைக்கு வாங்கியுள்ளார். அதனையடுத்து 45 லட்சம் டாலர் பணம் மோகனின் அக்கவுண்டிற்கு வந்துள்ளது.
பணத்தை இந்தியாவில் உள்ள வங்கிக் கணக்கில் எடுத்தால் வரி பிரச்சனை ஏற்படும் என்ற அடிப்படையில், பணத்தை வெளிநாட்டு நண்பர் பரணி என்பவரின் வங்கிக்கணக்குக்கு மோகன் அனுப்பி அதனை இந்தியப்பணமாக மாற்றித்தர கோரியுள்ளார். ஆனால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை என பரணி மோகனிடம் கூறியுள்ளார். அதனை மோகன் ரமேஷிடம் தெரிவித்த போது, ரமேஷ் ரெட்டி மற்றும் பிரபாகரன் ஆகியோர் 45 லட்சம் டாலர் பணத்தை ஏமாற்றிவிட்டதாக கூறி மோகனை அவரது சொந்த ஊரான மார்த்தாண்டத்தில் இருந்து கடத்தியுள்ளனர்.
பணம் கேட்டு மிரட்டிய அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததால் சென்னையில் உள்ள மனைவி, மகள் நகையை அடகு வைத்து ரூ. 15 லட்சத்தை ரமேஷ் ரெட்டியிடம் மோகன் கொடுத்துள்ளார். இந்நிலையில் மோகன் இருவரிடமும் இருந்து தப்பித்து வந்து, போலி இணையதளத்தில் தான் ஏமாந்தது பற்றி அறிந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பிறகுதான் வந்து அடையாறு சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அடையாறு சைபர்கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் swift global pay மற்றும் instant merchant pay இரண்டும் நைஜீரிய கும்பலால் உருவாக்கப்பட்ட மோசடி இணையதளம் என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது போன்று 45 லட்சம் டாலர் மதிப்புள்ள வாலட்டை, பிட்காயின்கள் கொண்டு வாங்கலாம் என கூறி, பிட் காயின்களை மோசடி செய்வதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 43 ஆயிரம் பேர் அந்த இணையதளத்தில் உலக அளவில் ஏமாந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இது போன்ற புகார் ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஏராளமாக வந்து குவிந்துள்ளன. பலர் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், இந்த ஆன்லைன் மோசடி வலையில் பிட்காயின்களை முதலீடு செய்து பல பணக்காரர்கள் ஏமாந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அந்த மோசடி அக்கவுண்ட்டை இயக்கும் நைஜீரிய கும்பல்கள் குறித்து சைபர்கிரைம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான ரமேஷ் ரெட்டி, பிரபாகரன் இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.