சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை நகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை போனில் பேசிய அடையாளம் தெரியாத நபர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். உடனே ரயில்வே போலீசார் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். நீண்ட நேரம் நடத்திய சோதனையில் அது வெறும் புரளி என தெரியவந்தது. சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது வடபழனியைச் சேர்ந்த பெண் ஒருவருடையது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று விசாரித்த போது பெண்ணின் கணவர் முருகன் மனநலம் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சந்திக்க மனைவி கீழ்ப்பாக்கம் மநல காப்பகத்திற்கு சென்றபோது மனைவியின் செல்போனில் இருந்து முருகன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. மனநல காப்பகத்தில் இருந்து தன்னை வீட்டிற்கு மனைவி அழைத்து செல்லாததால் இது போன்ற செயலில் முருகன் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் போலீசார் அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பினர்.