சென்னை, சைபர் குற்றப்பிரிவு புலனாய்வை மேம்படுத்தும் நோக்கில் சென்னை நகரில் உள்ள 12 காவல் மாவட்ட சைபர்கிரைம் காவல் நிலைய ஆளிநர்களுக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் லேப்டாப்கள் வழங்கினார்.
தற்போதைய அசுர விஞ்ஞான வளர்ச்சியில் இணையதளம் மற்றும் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில், இணையவழி பரிவர்த்தனைகள் மற்றும் சேவைகள் மூலமாக குற்றங்கள் பெருகி வருகிறது. அவற்றை களையும் வகையில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சென்னை நகரில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு தொடங்கப்பட்டன.
பொதுமக்களின் இணையவழி குற்றங்கள் தொடர்பான அவ்வப்போது புகார்களை பெற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், இணையவழி பணிவர்த்தனை மற்றும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மோசடி கும்பலை கைது செய்து, பொதுமக்களின் பணத்தை மீட்டு அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்து வருகின்றனர். அத்துடன் காணாமல் மற்றும் திருடு போன செல்போன்களும், இந்த மாவட்ட சைபர் குற்றப்பிரிவின் IMEI தகவல் திரட்டும் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள சைபர் குற்றப்பிரிவு புலனாய்வை மேம்படுத்தும் விதமாக கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று 12 காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு பொறுப்பு அதிகாரிகளுக்கு தலா ஒரு லேப்டாப் என 12 லேப்டாப்புக்களை வழங்கினார். அதனையடுத்து காவல் அதிகாரிகள் முன்னிலையில் அவர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சென்னை நகர தலைமையிட கூடுதல் கமிஷனர் அமல்ராஜ், இணைக்கமிஷனர் மல்லிகா, நுண்ணறிவுப்பிரிவு துணைக்கமிஷனர்கள் விமலா, ஸ்ரீதர்பாபு, நிர்வாகப்பிரிவு துணைக்கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா உள்ளிட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.