தியாகராயநகர் தாமஸ் குடியிருப்பில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு..
சென்னை திநகரில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் இன்று காவல் அதிகாரிகள் இணைந்து கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
சென்னை நகரில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு போலீசார் விழிப்புணர்வு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று (13.4.2021) காலை, தி.நகர், தியாகராயா சாலை மற்றும் தாமஸ் சாலையிலுள்ள குடியிருப்பு வளாகத்தில், தியாகராய நகர் காவல் மாவட்டம் சார்பில் கொரேனா விழிப்புணர்வு முகாம் நடந்தது.
போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க முகக்கவசம் அணிதல், திரவ சுத்திகரிப்பான் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், வெளியிடங்களில் சமூக இடைவெளி கடைபிடித்தல், தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் கலைஞர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.
மேலும் போலீஸ் கமிஷனர் பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கி, கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக அங்கு மருத்துவ குழுவினருடன் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமினை கமிஷனர் துவக்கி வைத்தார். பொதுமக்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை நகர (தெற்கு) கூடுதல் கமிஷனர் டாக்டர் என் கண்ணன், இணைக்கமிஷனர் (தெற்கு) லட்சுமி, திநகர் துணைக்கமிஷனர் ஹரிகிரன் பிரசாத், போக்குவரத்து (தெற்கு) துணைக்கமிஷனர் தீபாசத்யன் மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.