சென்னை நகரில் செயின்பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 15 குற்றவாளிகளை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுமதிகள் வழங்கி பாராட்டினார்.
சென்னை நகரில் சிறப்பான காவல்பணி மற்றும் புலனாய்வில் திறமையாக செயல்படும் காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு வெகுமதிகள் வழங்கி கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஊக்கமளித்து வருகிறார். அதன்பேரில் சென்னை மயிலாப்பூர், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, ராயுபுரம், தண்டையார்பேட்டை பகுதிகளில் தொடர் திருட்டுச் சம்பவங்களில் தனிப்படை போலீசார் புலனாய்வு மேற்கொண்டனர். அதனையடுத்து கொள்ளையர்கள் தனுஷ் (-23), சூர்யா (-21), ராகுல் (-22), ராகேஷ் (-20), கார்த்திக் (-19), அருண், டியோ மணி (24), சஞ்சய் (-20) ஆகிய 7 பேர் நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் இவர்கள் 3 சங்கிலி பறிப்பு, 11 செல்போன் பறிப்பு, 5 இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
சென்னை, பேசின்பாலம் பகுதியில் கத்தியைக்காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் (-26), மோகனசுந்தரம் (-27), கோபாலகிருஷ்ணன் (-26), அருண் பாண்டியன் (-24), பிரபு (-27) நவீன் (23) ஆகிய 6 பேர் பாதிப்படைந்தவர் புகார் அளித்த 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். மேலும் செங்குன்றம், ஜிஎன்டி மளிகைக்கடை அருகில் நேற்று நடைபெற்ற வழிப்பறிச் சம்பவத்தில் போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கி நாரவாரிக்குப்பத்தைச் சேர்ந்த சாதிக்பாஷா (29) என்பவரை கைது செய்தனர்.
மேலும் திருவேற்காடு, வேலப்பன்சாவடி சவீதா பல் மருத்துவமனை அருகில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் அரசு பஸ் டிரைவர் அண்ணாநகரைச் சேர்ந்த பாரதிராஜா (வயது- 31) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 இருசக்கரவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை அவர் குறைந்த விலைக்கு விற்றது தெரியவந்தது.
மேற்கண்ட குற்றச்சம்பவங்களில் உடனடியாக தீவிர விசாரணை செய்து தளராத மனதுடன் தொடர் பணியினால் குற்றங்களை கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ளை நேரில் அழைத்து நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.