செய்தியாளர் மோசஸ் படுகொலை : திருமாவளவன் கண்டனம்

குன்றத்தூரில், செய்தியாளர் மோசஸ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அந்த பகுதியில் நடந்த சமூக விரோத சம்பவங்களை அம்பலப்படுத்தியதால் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.கொலையாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைப்படுத்தவேண்டும். கொலையுண்ட மோசஸ் குடும்பத்துக்கு 50 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டுமென்று, தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக காவல்துறையில் அவர் புகார் அளிக்கும்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்தப் படுகொலை நிகழ்ந்திருக்கிறது. கொலை மிரட்டல் புகார்மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டப்பட்டதைப் பார்க்கும்போது காவல்துறையில் உள்ள சிலருக்கும் சமூக விரோதிகளுக்கும் தொடர்பு இருக்கிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

தமிழக அரசு விசாரணை நடத்தி காவல்துறையைச் சேர்ந்தவர்கள் யாரும் இதற்கு உடந்தையாக இருந்தால் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. ஊடகவியலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டால் அது ஜனநாயகத்துக்கு பேராபத்தாகவே முடியும். எனவே ஊடகவியலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று, திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!