செல்போன் கொள்ளையர்கள் சிசிடிவி கேமரா உதவியால் பிடிபட்டனர்

சென்னை, சங்கர்நகர் பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சென்னை, பம்மல், அண்ணாநகர், 7வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் யோகேஷ் பர்னான்ட் (வயது 45). கடந்த ஜுலை மாதம் 25ம் தேதியன்று இரவு சங்கர் நகர், 4வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் யோகேஷின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து யோகேஷ் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சங்கர்நகர் போலீசார் அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு நடத்தினர். மேலும் திருடு போன யோகேஷின் ஐஎம்இஐ எண்ணை வைத்து புனித தோமையர்மலை மாவட்ட சைபர் குற்றப்பிரிவு மூலம் விசாரணை நடத்தினர். அதனையடுத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் பல்லாவரம் பாபு முகமது அனீப் (வயது 31), மைனுதீன் (21) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இருவரும் சங்கர்நகர் சுற்று வட்டார பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும், குற்றவாளி மைனுதீன் கஞ்சா வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று சமீபத்தில் பிணையில் வந்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகளும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!