சட்டவிரோத கட்டுமானம் எனக்கூறி சோனு சூட்டின் ஓட்டலை இடிக்க மாநகராட்சி முயன்ற நிலையில், அதற்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி படங்களில் வில்லனாக நடித்துள்ள சோனுசூட் கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். சோனுசூட்டுக்கு சொந்தமாக மும்பை ஜுஹூ பகுதியில் 6 மாடிகள் கொண்ட ஓட்டல் உள்ளது.
அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதியை அவர் ஓட்டலாக மாற்றிவிட்டதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். ஓட்டலை இடிக்கும் முயற்சியிலும் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். இதை எதிர்த்து சோனுசூட் மும்பை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது மாநகராட்சி சார்பில் வாதாடிய வக்கீல் குடியிருப்பு பகுதியை சோனுசூட் 24 அறைகள் கொண்ட ஓட்டலாக மாற்றி இருக்கிறார். இது சட்டவிரோதமானது என்றார். சோனு சூட் சார்பில் ஆஜரான வக்கீல் ஓட்டலுக்கு அனுமதி கோரி கடலோர ஆணையத்தில் விண்ணப்பித்து உள்ளோம் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி நாளை வரை (13-ந் தேதி) 2 நாட்கள் சோனுசூட் ஓட்டலை மாநகராட்சி இடிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.