சோளமாவு லாரியில் கஞ்சா கடத்திய டிரைவர் கைது

சென்னை மாதவரத்தில் சோளமாவு லாரிக்குள் பதுக்கி கஞ்சா கடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக மாதவரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சென்னை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் சரவணபிரபு தலைமையில் தீவிரமாக கண்காணித்தனர். நள்ளிரவு 1.45 மணியளவில் ஜிஎன்டி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமலட்சுமி திருமண மண்டபம் அருகில் வேகமாக வந்த லோடு லாரியை மடக்கி நிறுத்தி சோதனையிட்டதில் உள்ளே 25 டன் சோளமாவு மூட்டைக்குள் 4 கிலோ கஞ்சா பதுக்கியதை கண்டு பிடித்தனர். கஞ்சாவை கடத்தி வந்த புழலைச் சேர்ந்த லாரி டிரைவர் கார்த்திக் (வயது 26) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் கஞ்சாவை ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ளே மாட்டூரிலிருந்து 36 ஆயிரம் ரூபாய்க்கு சுரேகா என்பவரிடம் இருந்து வாங்கி வந்ததாக கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கார்த்திக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்றக்காவலில் சிறையில் அடைத்தனர்.

Translate »
error: Content is protected !!