சென்னை,
பொதுமக்கள் பார்வையிடுவதற்கு ஜெயலலிதாவின் வேதா இல்லம் வருகிற 28ந்தேதி (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
அதில் ஜெயலலிதா விரும்பிய 15000க்கும் மேற்பட்ட நூல்கள் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.
சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் புத்தகக்காட்சி தற்போது மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த நிரந்தர புத்தகக் காட்சி மற்றும் விற்பனை நிலையத்தில் 30,000 தலைப்புகளில் நூல்கள் இடம்பெற்றுள்ளன.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு 125 பதிப்பாளர்களின் பங்களிப்புடன் ஆண்டு முழுவதும் வாரத்தில் 7 நாட்களும் நிரந்தர புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக கன்னிமாரா நூலகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு புத்தக விற்பனை அரங்கத்தை திறந்து வைத்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா புத்தகங்கள் வாசிப்பதில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். அந்த வகையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. இந்த வேதா இல்லம் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வருகிற 28ந்தேதி (வியாழக்கிழமை) திறக்கப்பட உள்ளது.
அந்த இல்லத்தில் ஜெயலலிதாவைக் கவர்ந்த 15,000 நூல்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன. மேலும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளும் இடம்பெறும். இதுதவிர ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அம்மா அறிவு மையம் மற்றும் அருங்காட்சியகம் உருவெடுத்து வருகின்றன.