ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், டிவில்லியர்ஸின் அதிரடியாக ஆடி, 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள், தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த முதலாவது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணிக்கு உத்தப்பா சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தார். அவர், 22 பந்துகளில் 41 ரன்களை குவித்து வெளியேறினார்.
பின்னர் வந்த கேப்டன் ஸ்மித் அரைசதம் கடந்து, 57 ரன்களில் ஆட்டமிழந்தார். பட்லர் (24), திவேதியா (19) தங்கள் பங்கிற்கு ரன்களை சேர்க்க, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை ராஜஸ்தான் சேர்த்தது. பெங்களூரூ அணி தரப்பில் மோரிஸ் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
அடுத்து விளையாடிய பெங்களுக்கு அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. படிக்கல் (35), பின்ச் (14), விராட் கோலி (43) ஆகியோர் ஆட்டமிழந்தாலும், தனி ஒருவனாக டிவில்லியர்ஸ் மட்டும் வெற்றிக்காக போராடினார்.
கடைசி ஓவரில் பெங்களுரு அணிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. 3 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், சிக்சர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார் டிவில்லியர்ஸ். அவர், கடைசி வரை ஆட்டமிழக்காமல், 22 பந்துகளில் 55 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம், 9 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரூ 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.