டெல்லி நோக்கி பேரணி நடத்த முயன்ற அரியானா விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் அரியானாவை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் டெல்லி செல்வதற்காக கடந்த சில நாட்களாக டெல்லிஜெய்ப்பூர் சாலையில் திரண்டு வந்தனர். அவர்கள் நேற்று மாலையில் டெல்லி நோக்கி தங்கள் பேரணியை தொடங்கினர். ரிவாரி மாவட்டத்தின் மசானி பகுதியில் அவர்கள் வந்தபோது போலீசார் தடுப்பு வேலிகளை வைத்து அவர்களை தடுத்தனர்.

ஆனால் அவர்கள் அதை மீறி செல்ல முயன்றனர். இதைத்தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவி வருகிறது. இதற்கிடையே டெல்லி போராட்டக்களத்தில் 24 மணி நேரத்தில் மேலும் 3 விவசாயிகள் மரணமடைந்திருப்பதாக போலீசார் நேற்று தெரிவித்தனர்.

இதில் ஒருவர் மாரடைப்பாலும், மற்றொருவர் காய்ச்சலாலும் இறந்துள்ள நிலையில், 3-வது நபரின் மரணத்துக்கான காரணம் பிரேத பரிசோதனைக்குப்பின் தெரியவரும் என அவர்கள் தெரிவித்தனர். தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காவிட்டால் வருகிற 13-ந்தேதி வேளாண் சட்ட நகல்களை எரித்து லோரி பண்டிகையை கொண்டாடுவோம் என விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!