தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் பூடானில் கடந்த 7ஆம் தேதி முதல் தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வீரர் வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர்.
பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் இந்தியா சார்பில் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட எஸ்.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை – கமலாநேரு தம்பதியினரின் மகன் அன்புதுரை என்ற மாணவர் டேக்வாண்டோ போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார்.
நேபாளத்தில் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற தெற்காசிய போட்டிகளில் தங்கம் வென்ற மாணவன் அன்புதுரை தற்போது நடைபெற்ற தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டு போட்டிகளிலும் இரண்டாவது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தார். தங்கம் வென்று தாயகம் திரும்பிய வீரருக்கு பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்றிணைந்து பட்டாசு வெடித்து சால்வையணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தங்கம் வென்ற மாணவன் அன்புதுரை கூறுகையில்… தனது உறவினர் மற்றும் தாயுடன் கல்வி பயின்றவர்கள் உதவியால்தான் போட்டிக்குச்செல்ல முடிந்தது என்றும், அவர்களுக்காகவே தான் இந்த பதக்கத்தை வென்றதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க அரசின் உதவி எனக்கு தேவை, அடுத்து நடைபெறும் காமன்வெல்த் போட்டியிலும் தங்கப் பதக்கம் வெல்வேன் என நம்பிக்கையுடன் தெரிவிக்கும் அன்புதுரை, அடுத்து நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு நிச்சயம் பயிற்சி மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் 12 ம் வகுப்பு முடித்த தான் கல்லூரி அளவில் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் தங்கம் பெற்றால்தான் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க முடியும், எனக்கு காலம் நிறைய இருக்கிறது நிச்சயம் காமன்வெல்த் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவேன். நடப்பாண்டு நடந்த ஐந்து போட்டியிலும் தங்கம் வென்றதாகவும், எனது வெற்றி தொடரும் என உறுதியுடன் தெரிவித்தார் அன்புதுரை.