தட்டார்மடம் கொலை வழக்கு: அதிமுக பிரமுகர் உள்பட இருவர் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண்

தூத்துக்குடி, தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் உள்பட இருவர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். அவர்களை புழல் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வன். தண்ணீர் கேன் வியாபாரியான இவர் சொத்துப்பிரச்சினை காரணமாக கடந்த 17ம் தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். திசையன்விளை போலீசார் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தட்டார்மடம் அருகே உசரத்துகுடியிருப்பைச் சேர்ந்த அ.தி.மு.க. தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவரான திருமணவேலுக்கும், செல்வனுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்ததும், இதில் செல்வன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

மேலும் திருமணவேலின் தூண்டுதலின்பேரில், செல்வன் மற்றும் அவரது சகோதரர்கள் மீது தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பொய் புகாரில் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்தியதாக செல்வனின் தாயார் எலிசபெத் புகார் அளித்து இருந்தார். இதையடுத்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்ளிட்டவர்கள் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக இதுவரை 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தலைமறைவான திருமணவேல் உள்ளிட்டவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் அதிமுக பிரமுகர் திருமண வேல், மற்றொரு முக்கிய குற்றவாளி முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரும் நேற்று சைதாப்பேட்டை 23-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிமன்ற நடுவர் கவுதம் முன்பு சரணடைந்தனர். இருவருக்கும் மூன்று நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார்.

கொரோனா பரிசோதனைக்கு பிறகு 2 பேரையும் போலீசார் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்படவுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இதன் பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள திசையன்விளை போலீசார் 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!