தமிழகத்திற்கு 5 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்காக, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சர்வதேச அளவில் ஒப்பந்தம் கோரியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் உலகளாவிய ஒப்பந்தம் மூலம், கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் தற்போது, 5 கோடி டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் படி, 2 கோடி ரூபாய் தொகை, ஏலத்தின் பாதுகாப்புத் தொகையாக செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் கோரிய 90 நாட்களில் 5 கோடி டோஸ் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதில், 90 நாள்களில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்க தயாராக உள்ள நிறுவனங்கள் ஜூன் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் கோரும் நிறுவனம், தடுப்பூசியின் விலை, திறன் மற்றும் இருப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தடுப்பூசிகளை, கொள்முதல் செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.