தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை,

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வளி மண்டல மேலடுக்கில் மேற்கு திசையில் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை பெய்யக் கூடும்.

நாளை இலங்கையை ஒட்டியுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். தமிழகம் மற்றும் புதுவையில் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

சென்னையின் சில பகுதிகளில் இரு நாட்களுக்கு மழை பெய்யும். அடுத்த இரு தினங்களுக்கு குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என புவியரசன் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!