தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு ஆக்சிஜன் தேவை அளவு என்ன? நம்மிடம் கையிருப்பு இருக்கிறதா என்ற விவரங்களை காணலாம்.
தற்போதைய நிலையில் சராசரியாக நாளொன்றுக்கு 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதியில் தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை 465 மெட்ரிக் டன்னாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது தற்போது பயன்படுத்தப்படுவதை விட இரண்டு மடங்கு ஆக்சிஜன் நமக்கு தேவைப்படும். ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு 200 மெட்ரிக் டன் என ஒதுக்கீடு செய்துவிட்டு ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை 360 மெட்ரிக் டன்னாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன்கூடிய படுக்கைகள் 40 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளன. அதில், 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 25,987 ஆக்சிஜன் படுக்கைகள் இருக்கின்றன. இதில் தற்போது 8,369 படுக்கைகள் நிரம்பியுள்ள நிலையில், 17,618 படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை மொத்தம் 10,568 ஆக்சிஜன் படுக்கைகள் இருக்கின்றன. இதில் 3,671 படுக்கைகள் நிரம்பியுள்ளன என்றும், 6,897 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக இருப்பதாகவும் சுகாதாரத்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், அறிகுறி இல்லாமல் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் என்பதால், ஆக்சிஜன் படுக்கைகளின் தேவை குறைவாக இருப்பது சுகாதாரத்துறையின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
முதல் அலையுடன் ஒப்பிடும் போது தற்போது தொற்று பரவும் வேகம் அதிகம் என்பதால், ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதாகவும், ஆக்சிஜன் வழங்குதலை முறையாக செயல்படுத்த தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வசந்தாமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆக்சிஜனை சேமிக்கத் தேவையான திறன் முதல் அலையின் போதே உருவாக்கப்பட்டதாகவும், தற்போது இங்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மத்திய அரசிடமிருந்து, ஏப்ரல் 21ஆம் தேதி 4,880 டன், 25ஆம் தேதி 5,619 டன், 30ஆம் தேதி 6,593 டன் என தொடர்ந்து ஆக்சிஜன் தமிழகம் வர உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.