கொரோனாவால் பாதிக்கப்படும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிகிச்சை பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள கோர்ட் வளாகங்களில் கோவிட் கேர் மையங்கள் அமைக்கப்படவேண்டும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பாக தமிழகம் மற்றும் புதுவை பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தினமும் ஏராளமான உயிர்கள் பலியாகின்றன. இதற்கு வழக்கறிஞர்களும் விதிவிலக்கல்ல. தமிழகம், புதுவையில் வாழும் வழக்கறிஞர்கள் மற்றும் அவரது குடும்பங்கள் கொரோனா நோயினால் பாதிப்படைந்து தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.
ஏழ்மை நிலையில் உள்ள வழக்கறிஞர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே தமிழகம், புதுவையில் உள்ள நீதிமன்றங்களில் சட்டத்துறையில் பணிபுரியும் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அவர்களது குடும்பங்கள் சிகிச்சை பெறும் வகையில் அவர்களின் நலனில் அரசு அக்கறை செலுத்த வேண்டும். தமிழகம், புதுவை கோர்ட் வளாகங்களில் தற்காலிக கோவிட் 19 கேம்ப் அமைக்க வேண்டும்.
ஆக்ஸிஜன் படுக்கைகளுடன் கூடிய பெட்கள் அமைத்து அவற்றில் பாதிப்படைந்த வழக்கறிஞர்களுக்கு சிகிச்சை அளித்தல் வேண்டும். இந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள தலைமை நீதிபதி தமிழக அரசுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும். இதனால் தமிழகம், புதுவையில் உள்ள வழக்கறிஞர்கள், அவரது குடும்பங்கள் மிகவும் பயனடைவார்கள். வழக்கறிஞர்களுக்கு கொரோனா சிகிச்சையளிப்பது தொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் அதற்கென தனி நோடல் அதிகாரிகளை நியமித்து அவர்களது நலனில் தனி அக்கரை செலுத்த வேண்டும்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.