தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 20ம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் நாளை முதல் மேலும் சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.
அதன்படி அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயக்க அனுமதி இல்லை.
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன் கடைகள் இயங்க அனுமதி இல்லை. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதியில்லை, எனினும் தினமும் நடைபெறும் பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகள், வழிபாட்டு தளங்கள் மூலம் நடத்துவதற்கு தடை இல்லை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை வங்கிகளுக்கான வழிகாட்டுதல்களை மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது. அதில் தமிழகத்தில் வங்கிகளின் வேலை நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பு இல்லாத அலுவலகர்கல் வழக்கான நேரப்படி பணியை தொடர்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதார் பதிவு மையங்களின் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், ஏ.டி.எம் மற்றும் பணம் செலுத்தும் இயந்திரங்கல் ஆகியன தொடர்ந்து செயல்படுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.