தமிழகத்தில் நேற்று கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது,
தமிழகத்தில் நேற்று 336 ஆண்கள், 213 பெண்கள் என மொத்தம் 549 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 150 பேரும், கோவையில் 54 பேரும், செங்கல்பட்டில் 46 பேரும், திருவள்ளூரில் 28 பேரும், ஈரோட்டில் 24 பேரும், திருப்பூரில் 22 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர், திருவண்ணாமலையில் தலா 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், பெரம்பலூரில் நேற்று ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 32 ஆயிரத்து 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இங்கிலாந்தில் இருந்து வந்த 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 6 பேரும் என 9 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுவரையில் 12,290 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 713 பேர் நேற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது சிகிச்சையில் 5 ஆயிரத்து 314 பேர் உள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 50 லட்சத்து 82 ஆயிரத்து 351 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்து 11 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் நேற்று 171 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது.
7 ஆயிரத்து 614 பேருக்கு “கோவிஷீல்டு” தடுப்பு மருந்தும், 148 பேருக்கு “கோவேக்சின்” தடுப்பு மருந்தும் என மொத்தம் 7 ஆயிரத்து 762 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 32 ஆயிரத்து 894 பேருக்கு “கோவிஷீல்டு” தடுப்பூசியும், 776 பேருக்கு “கோவேக்சின்” தடுப்பூசியும் என 33 ஆயிரத்து 670 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.