கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்துள்ளன.
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தமிழக அரசு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அதனுடன் சேர்த்து புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி, தனியாக செயல்படுகின்ற காய்கறி மற்றும் பலசரக்கு, மளிகைக் கடைகள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வகை கடைகளிலும் ஒரே சமயத்தில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. மளிகை, காய்கறி,பலசரக்கு கடைகளை தவிர பிற கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.எனினும் மருந்தகங்கள், பால் வினியோகம், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேநீர் கடைகளும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்றும் உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பயணிகள் ரயில்கள், மெட்ரோ ரயில்கள், வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50% இருக்கைகளுக்கு மேல் நிரப்பவும் அரசு தடை விதித்துள்ளது. இறுதிச் சடங்குகளில் 20 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ளவும் அரசு அனுமதித்துள்ளது.
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளை தொடர்ந்து ஊரக பகுதிகளிலும் அழகு நிலையங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன் மற்றும் இறைச்சிக்கடைகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் வரும் 20ஆம் தேதி வரையிலும், இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு பொது முடக்கம் போன்ற அறிவிப்புகள் மறு உத்தரவு வரும் வரையிலும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.