தமிழகத்தில் மேலும் 2 இங்கிலாந்து பயணிக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி

சென்னை,

தமிழகத்தில் ஏற்கனவே இங்கிலாந்தில் இருந்து வந்த 9 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 2 இங்கிலாந்து பயணிக்கு புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 269 ஆண்கள், 182 பெண்கள் என மொத்தம் 451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 149 பேரும், குறைந்தபட்சமாக கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தென்காசி, திருப்பத்தூர், தேனி, விருதுநகர், தூத்துக்குடியில் தலா இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர், ராணிப்பேட்டையில் நேற்று ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.

தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 46 ஆயிரத்து 26 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 5,11,253 பேர். பெண்கள் 3,34,738 பேர். மூன்றாம் பாலினத்தவர் 35 பேர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 4 பேரும் என 7 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து 470 பேர் நேற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர்.

மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8 லட்சத்து 29 ஆயிரத்து 388 பேர். தற்போது சிகிச்சையில் 4 ஆயிரத்து 206 பேர் உள்ளனர். தற்போது 68 அரசு ஆய்வகங்கள், 186 தனியார் ஆய்வகங்கள் என 254 ஆய்வகங்கள் உள்ளன. இதில் நேற்று ஒரு நாளில் 50,800 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

இதுவரை 1 கோடியே 68 லட்சத்து 63 ஆயிரத்து 820 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 8-ந் தேதி முதல் நேற்று வரை இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 2,147 பேரில் 1,770 பேர் கண்டறியப்பட்டு பரிசோதித்ததில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 1,727 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

மீதமுள்ள 36 பயணிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களுக்கு 2-ம் முறை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 4 பேருக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் தமிழகத்தில், ஏற்கனவே இங்கிலாந்தில் இருந்து வந்த 6 பயணிகள் உள்பட 9 பேருக்கு புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று மேலும் 2 பயணிகளுக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!