பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்டக்குழுவின் ஆலோசனைக்குப்பின், வருகிற 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கும், பின்னர் 50 வயதை கடந்தவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கும் இந்த தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்க இருக்கும் நிலையில், மத்திய தொகுப்பில் இருந்து முதற்கட்டமாக 5.56 லட்சம் தடுப்பு மருந்து டோஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தடுப்பூசி போடும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தடுப்பூசிகளை வைப்பதற்கு குளிர்பதனவசதிகளை ஏற்படுத்துதல், ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக, அனைத்து மாவட்டங்களிலும் 190 மையங்களில் 2 கட்டங்களாக தடுப்பூசி திட்ட ஒத்திகை நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணிகளை தொடங்குவதற்கான தயார் நிலை உறுதி செய்யப்பட்டது.
இந்தசுழலில் புனேயில் இருந்து இன்று காலை கொரோனா தடுப்பூசிகள் சென்னை வர உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் புனேவில் இருந்து அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து தமிழகம் வந்தடைந்தது. இதன்படி புனேவில் இருந்து விமானத்தில் 5,.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு இன்று காலை 10.30 மணிக்கு கொண்டு வரப்பட்டன.