தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லைப்பகுதியான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு தமிழக விவசாய கூலி தொழிலாளர்கள் மட்டுமின்றி பீகார், குஜராத், ஒடிசா, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் அதிகளவில் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா 2ம் அலையில் காரணமாக சொந்த மாநிலங்களுக்கு சென்ற விவசாய தொழிலாளர்கள் ,கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் பலர் மீண்டும் கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்ட வேலைக்கு திரும்பி வருகின்றனர். அதன்படி இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை, உடும்பன்சோலை பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு செல்வதற்காக கடந்த 14ம் தேதி மேற்குவங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உட்பட 56 பேர் தனியார் பஸ் மூலம் இ–பதிவு பெற்று வந்தனர்.
இன்று மாலை கம்பம் நகரை கடந்து கேரள மாநிலம் கம்பமெட்டிற்கு சென்றனர்.
அங்கு கேரள மாநில காவல்துறையினர் சோதனைசாவடியில் இருந்த காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் பஸ்சில் வந்த தொழிலாளர்களிடம் கொரோனா பரிசோதனை சான்று கேட்டனர். அவர்கள் சான்று இல்லை என கூறியுள்ளனர், கொரோனா பரிசோதனை சான்று இருந்தால் மட்டுமே கேரளாவில் அனுமதிக்கப்படுவதாக கூறி பஸ்சை தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி விட்டனர். இதையடுத்து கம்பம்மெட்டு மலை அடிவாரத்திற்கு வந்தடைந்தனர்.
அங்கு வந்த மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். இது குறித்து தகவலறிந்த கம்பம் காவல் ஆய்வாளர் சிலைமணி மேற்கு வங்காள விவசாய தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இது குறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து மேற்குவங்காள தொழிலாளர்களின் நிலைமை குறித்து இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருப்பசாமியிடம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின் மேற்கு வங்காள தொழிலாளர்களை கேரளாவிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களை கேரளாவில் உள்ள கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.