சென்னை பெருநகர மாநகராட்சியின் தலைமையகமாக செயல்படும் ரிப்பன் மாளிகையின் மேல் முகப்பில் வைக்கப்பட்டிருந்த “தமிழ் வாழ்க” பெயர் பலகையை “காபந்து” அரசான எ(டுபுடி)டப்பாடியார் தலைமையிலான தமிழக (அதிமுக) அரசு சத்தமே இல்லாமல் நீக்கி தமிழ் விரோத அரசு என்பதை நிருபித்துள்ளது.
அதுமட்டுமின்றி பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை (மெளன்ட் ரோடு), கடற்கரை சாலை, மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட நெடுஞ்சாலைகளுக்கு சூட்டப்பட்டிருந்த தமிழக மக்களின் உணர்வுகளோடு கலந்து, தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத சக்தியாக திகழும் தேசியத் தலைவர்களான ஈ.வெ.ரா, அண்ணா, காமராஜர் உள்ளிட்டோரின் பெயரை தேசிய நெடுஞ்சாலைதுறை தன்னிச்சையாக நீக்கி, மாற்றியிருப்பது மத்திய பாஜக, மாநில அதிமுக அரசுகளின் திட்டமிட்ட கூட்டு சதியாகவே தெரிகிறது.
அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இருந்த போது பாதுகாக்கப்பட்ட பல்வேறு உரிமைகள் தற்போது மத்தியில் ஆளுகின்ற பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அதிமுக அரசால் பறிகொடுக்கப்பட்டு, தமிழகத்தை நட்டாற்றில் விட்டு விட்ட சூழ்நிலையில் தமிழக உரிமைகளில் மத்திய அரசு தலையிடும் போது எதுவுமே தெரியாது போல கண்டும் காணாமல் இருப்பதை “மக்கள் நீதி மய்யம்” தொழிலாளர் நல அணி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் தமிழுக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் எதிராக செயல்படும் மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கண்டிக்கவோ, எதிர்த்து கேள்வி கேட்கவோ திராணியற்ற தமிழக (காபந்து) அரசு தற்போது தமிழன்னையின் அடிமடியிலேயே கை வைக்க தொடங்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தின் உரிமைகள் பலவற்றை மத்திய பாஜக அரசிடம் அடகு வைத்த எடப்பாடியார் அரசு தங்களது எஜமானர் விசுவாசத்தை காட்ட தமிழர்களின் உணர்வுகளோடு விளையாட தொடங்கியிருப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே ரிப்பன் மாளிகையில் நீக்கப்பட்டுள்ள “தமிழ் வாழ்க” பெயர் பலகையை அதே இடத்தில் மீண்டும் நிறுவிடவும், நெடுஞ்சாலைகளின் பெயர்களில் இருந்த ஈ.வெ.ரா, அண்ணா, காமராஜர் உள்ளிட்ட தேசியத் தலைவர்களின் பெயர்களை மீண்டும் நிறுவிடவும் தமிழக அரசையும், மத்திய நெடுஞ்சாலைத்துறையையும் மக்கள் நீதி மய்யம் சார்பில் வலியுறுத்துகிறோம்.