தாயைப் பற்றி தவறாக பேசியதால் ஆத்திரம் அடைந்து நண்பரின் கண்களை குடிபோதையில் குத்தி வெளியே எடுத்த தென்காசி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், கே. புதுார், கீழ்கல்லத்திகுளத்தைச் சேர்ந்தவர் அசோக சக்கரவர்த்தி (வயது 29). சென்னை, திருவான்மியூரில் உள்ள டீ கடையில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். அசோக சக்ரவர்த்தியின் ஊரைச் சேர்ந்தவர் பெரியபாண்டியன் (வயது 26). இருவரும் சென்னை தேனாம்பேட்டை, போயஸ் 1 வது தெருவில் சங்கரன் டீ ஸ்டாலில் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பெரியபாண்டியன் அடிக்கடி குடிபோதையில் அசோக சக்கரவர்த்தியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு 10.30 மணியளவில் இருவரும் சென்னை மெரினா கடற்கரை ராணி மேரி கல்லூரி எதிரில் மணற்பரப்பில் மது அருந்தினர்.
அப்போது இருவருக்கும் இடையில் திடீரென தகராறு ஏற்பட்டது. அசோக சக்கரவர்த்தி, பெரியபாண்டியன் அம்மாவின் சேலையை கிழிப்பேன் என்று தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெரியபாண்டியன் அங்கு கிடந்த பீர் பாட்டிலை உடைத்து அசோக சக்கரவர்த்தியின் கழுத்தில் குத்தியுள்ளார்.
பின்பு அவரது மார்பில் ஏறி அமர்ந்து அதே பாட்டிலால் இரண்டு கண்களையும் குத்தி காயப்படுத்தி அங்கு கிடந்த பிளாஸ்டிக் குச்சியால் அசோக சக்ரவர்த்தியின் கண்களை குத்தி வெளியே எடுத்ததாக தெரிகிறது. அந்த வழியாக வந்தவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
சப்–இன்ஸ்பெக்டர் திருமுருகன் சம்பவ இடத்துக்கு சென்று கடற்கரையில் கிடந்த அசோக சக்கரவர்த்தியை ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரியபாண்டியனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.