திண்டுக்கல் டிஐஜி சரகத்தில் உள்ள தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கடந்த 10 மாதங்களில் போக்சோவில் 208 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி தெரிவித்துள்ளார்.
நாளை நவம்பர் 14 குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் குழந்தைகள் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில் தமிழக காவல்துறையினர் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பெண்கள், குழந்தைகள் குற்றங்களை களைவதற்காக தமிழக காவல்துறையில் மாவட்டந்தோறும் பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி தலைமையில் இயங்கி வருகிறது. தமிழக அளவில் கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி அதனை மேற்பார்வையிட்டு சம்பந்தப்பட்ட எஸ்பிக்கு நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் காவல் சரகம் டிஐஜி முத்துசாமி தலைமையில் சிறப்பான பணிகளை கடந்த 4 மாதங்களாக சிறப்பாக செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கடந்த பத்து மாதங்களில் திண்டுக்கல் காவல் சரகத்தில் போக்சோ சட்டப்பிரிவில் சுமார் 208 பேர் கைதாகியுள்ளதாக டிஐஜி முத்துசாமி தெரிவித்துள்ளார். குழந்தைகள் குற்றத்தடுப்பு தொடர்பாக தொடரப்பட்ட 157 வழக்குகளிலும் ஒரு குற்றவாளி கூட விடப்படாமல் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிஐஜி முத்துசாமி கூறுகையில், ‘‘இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக அனைத்து வழக்கிலும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கெதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடந்த 10 மாதங்களில் தேனி மாவட்டத்தில் 70 வழக்குகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் 87 வழக்குகளும் என மொத்தம் 157 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளிலும், குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். தேனி மாவட்டத்தில் 70 வழக்குகளில் 97 பேர் குழந்தைகள் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 97 பேரும் கைது செய்யப்பட்டு விட்டனர். அதே போல திண்டுக்கல் மாவட்டத்தில் 87 வழக்குளில் 111 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த 111 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுவிட்டனர். ஆக மொத்தம், திண்டுக்கல் சரகத்தில் பதிவு செய்யப்பட்ட 157 வழக்குகளில் ஈடுபட்ட 208 குற்றவாளிகளில் 208 குற்றவாளிகளுமே கைது செய்யப்பட்டு விட்டனர். திண்டுக்கல் சரகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்’’ நாளை நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அதனை நினைவு கூர்ந்த டிஐஜி முத்துசாமி குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் திண்டுக்கல் சரக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். குழந்தைகளின் உரிமைகளை பேணிக் காப்போம். குழந்தைகளைப் போற்றுவோம்’’ என தெரிவித்தார்.