திருச்சி,
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
திருச்சி தேசியக் கல்லூரி, விமான நிலையம் வளாகங்களில் 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
ரெயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன் பிரமாண்டமான தேசியக்கொடி 24 மணி நேரமும் பறக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக்கம்பத்தில் நமது தேசிய கொடி 24 மணி நேரமும் பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து இதேபோல திருச்சி ரயில்வே ஜங்சன் முன் 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் தேசியக்கொடி ஏற்ற ரூ. 12 1/2 லட்சத்தில் ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் முன் பகுதியில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் நேற்று காலை 30 அடி நிலம் மற்றும் 20 அடி அகலம் கொண்ட தேசியக்கொடி நேற்று ஏற்றப்பட்டது.
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய அதிகாரி விருத்தாசலம் இயந்திர அமைப்பின் மூலம் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் தேவேந்திரன், சுகாதார ஆய்வாளர் கல்யாணசுந்தரம், வெடிகுண்டு தடுப்பு பிரிவு உதவி ஆய்வர் ராஜ்குமார் ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் கலந்து கொண்டனர்.