பொங்கல் பண்டிகைக்காக திருச்சி மத்திய சிறையில் கரும்பு பயிரிட்டு சிறப்பானதொரு விளைச்சலை எட்டிய சிறைக்கைதிகளின் உழைப்பு – 5லட்சம் வருவாய் கிட்டும் என எதிர்பார்ப்பு.
சிறைச்சாலைகள் என்பது தண்டனை கைதிகளின் தண்டனை காலமாக கழிவதை மாற்றுகின்ற வகையில் அவர்களின் கைத்திறனையும் வேளாண் திறனையும் மேம்படுத்தும் வகையிலும் மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்களால் தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் சிறை அங்காடி தொடங்கப்பட்டு வேலைவாய்ப்பு கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சி மத்திய சிறையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1500 விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைக்கைதிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட இனிப்பு, கார வகைகள் மற்றும் உணவுவகைகள் சிறை அங்காடிகளில் விற்பனை செய்துவரும் அதேவேளையில் சிறைவளாகத்தில் விவசாயத் தோட்டம் வயல்வெளி மற்றும் பண்ணைகள் அமைத்து சிறைக்கைதிகள் இயற்கைசிறை என்ற முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் பொங்கல் பண்டிகைக்காக சிறை வளாகத்தில் 2 ஏக்கரில் 50,000 கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. சிறையில் 60 சதவீதத்திற்கும்மேல் விவசாயம் தொழில் சார்ந்த கைதிகளாகவே உள்ளதால் அவர்களைக் கொண்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் செங்கரும்பு கரணை நடப்பட்டு, தற்போது நன்கு வளர்ந்து 6 அடி வரை வளர்ச்சி பெற்றுள்ள கரும்பாக உள்ளது.
தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி இன்றையதினம் சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் சங்கர் மேற்பார்வையில் சிறைக்கைதிகள் தாங்கள் நட்டு வளர்த்த கரும்புகளை அறுவடை செய்து அதனை கட்டுகளாக கட்டி சிறை அங்காடிகள்மூலம் விற்பனைக்கு அனுப்பிவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு முக்கால் ஏக்கர் பயிரிட்டதில் 2லட்சத்து 30ஆயிரம் ரூபாய் சிறைத்துறைக்கு வருவாய் கிடைக்கப்பெற்றதாகவும், நடப்பாண்டு திறந்தவெளி சிறைச்சாலையாக விரிவுபடுத்தி 2ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பால் 5லட்சம் விற்பனை வருவாய் கிட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், சிறைவாசிகள் வாழ்வாதாரம் ஊதியத்திற்கு இது வழிவகுப்பதுடன், விற்பனைக்கேற்ப 80சதவீதம் ஊதியம் சிறைவாசிகளுக்கு கிடைக்கும். திருச்சி மத்திய சிறையில் 23ஏக்கர் பரப்பளவில் பழங்கள், கீரை, வாழை, தென்னை, காய்கறிகள் பயிரிடப்பட்டு சீசனுக்கேற்ப அறுவடை நடைபெறுவதாக சிறை காவல் கண்காணிப்பாளர் சங்கர் தெரிவித்தார்.