தூத்துக்குடி திருச்செந்தூர் கோவிலில் நாளை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 15-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.விழா நாட்களில் தினமும் காலையில் யாகசாலை பூஜை நடைபெற்றது. மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.
மாலையில் சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து மீண்டும் யாகசாலை முன்பு எழுந்தருளினார்.விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான நாளை நடைபெறுகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலையில் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகிய பின்னர் சுவாமி வள்ளி-தெய்வானையுடன் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.