திருட்டுக்கும்பலிடம் இருந்து 26 புல்லட்டுக்கள் பறிமுதல்: தனிப்படைக்கு கமிஷனர் நேரில் பாராட்டு

சென்னை நகரில் இருசக்கர வாகன திருடர்கள் கும்பலிடம் இருந்து 26 புல்லட்டுக்களை பறிமுதல் செய்த இணைக்கமிஷனர் சுதாகர் தலைமையிலான தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னை எழும்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் புல்லட் இரு சக்கரவாகனங்கள் அடிக்கடி திருடு போயின. கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் தினகரன், கிழக்கு மண்டல இணைக்கமிஷனர் சுதாகர் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஜமாலுதீன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 26 புல்லட் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புல்லட் திருடர்களை சிசிடிவி கேமராக்கள் மூலம் இணைக்கமிஷனர் சுதாகர் மேற்பார்வையில் தனிப்படை அதிகாரி சேத்துப்பட்டு எஸ்ஐ சுதாகர், அபிராமபுரம் தலைமைக்காவலர் சரவணக்குமார் ஆகியோர் துரிதமாக புலனாய்வு மேற்கொண்டனர்.

அதனையடுத்து இரு சக்கர வாகனங்கள் திருட்டு தொடர்பாக தஞ்சாவூரைச் சேர்ந்த முகமதுஷபி, கேரளா சிபி, விருதுநகர் அமீர்ஜான் ஆகிய மூவரை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அதன் தொடர்ச்சியாக நேற்று ஜமால் (எ) ஜமாலுதீன் உள்பட 5 பேரை எழும்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைதான நபர்களிடம் இருந்து 26 புல்லட் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட மேற்படி நபர்கள் சென்னையில் பல பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.

மேலும் சென்னை ராயப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பாலாஜி உள்பட 4 நபர்களை மயிலாப்பூர் துணைக்கமிஷனர் சஷாங்சாய் மேற்பார்வையிலான உதவிக்கமிஷனர் லட்சுமணன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 165 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. புல்லட் பறிமுதல் மற்றும் கஞ்சா வழக்கில் திறமையாக பணிபுரிந்த ராயப்பேட்டை உதவிக்கமிஷனர் லட்சுமணன், சேத்துப்பட்டு எஸ்ஐ உள்ளிட்ட தனிப்படை போலீசாரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டினார்.

Translate »
error: Content is protected !!