திருந்தி வாழ்வதாக கூறி போலீசுக்கு டிமிக்கி கொடுத்த ரவுடிக்கு 354 நாட்கள் சிறை * மாதவரம் துணை ஆணையர் உத்தரவு

சென்னை மாதவரத்தில் 1 வருட கால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறிய ரவுடியை 354 நாட்கள் சிறையில் அடைத்து சென்னை மாதவரம் போலீஸ் துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

 

சென்னை, எண்ணூர், சத்தியவாணி முத்து நகர், 10வது தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (26). பிரபல ரவுடியான இவர் மீது எண்ணுார் காவல் நிலையத்தில் ஹிஸ்டரிஷீட் ரவுடிகள் லிஸ்டில் பெயர் உள்ளது. ஒரு கொலை முயற்சி வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகள் இவர் மீது உள்ளன. கடந்த மாதம் 29ம் தேதியன்று மாதவரம் துணை ஆணையர் அலுவலகம் முன்பு ஆஜராகி தான் திருந்தி வாழ விரும்புவதாக ரவடி தினேஷ்குமார் தெரிவித்தார். அதன்படி 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்தார். ஆனால், உறுதியளித்தபடி நடக்காமல் தினேஷ்குமார் கடந்த 6ம் தேதியன்று எண்ணுார் போலீஸ் நிலைய எல்லையில் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்து கோர்ட் உத்தரவின் பேரில் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

1 வருட காலத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதிக் கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக செயல்முறை நடுவராகிய மாதவரம் துணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன் தினேஷ் குமாருக்கு 354 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். கு.வி.மு.ச. பிரிவு 107ன் கீழ் நன்னடத்தை பிணை ஆவணத்தில் எழுதிக் கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து, மீதமுள்ள 354 நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை தினேஷ்குமாருக்கு விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதன்பேரில் தினேஷ்குமார் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

Translate »
error: Content is protected !!