போக்குவரத்துக்கழக அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.
அதன்படி நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்துக்கழக அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதனால் 10 சதவீத அரசு பஸ்களே இயக்கப்பட்டன. 90 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.
மேலும் திருப்பத்தூரில் இருந்து சென்னை, பெங்களூரு, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களுக்குச் செல்லக்கூடிய பஸ்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டன. இதனால் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். திருப்பத்தூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கிராமப்புறங்களுக்குச் செல்லக்கூடிய பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. எனினும், அனைத்துத் தனியார் பஸ்களும் வழக்கம் போல் ஓடின.