வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில், ஆணவக் கொலைகள், மது கட்டுப்பாடு, திருமணம் ஆகாதோர்கள் சேர்ந்து இருத்தல், விவாகரத்து மற்றும் வாரிசு உரிமை தொடர்பான பல்வேறு தனிநபர் கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமிரகம் (யு.ஏ.இ.), கடுமையான இஸ்லாமிய சட்டங்களில் இருந்து தனிநபருக்கு சுதந்திரத்தை அளிக்கும் வகையில், நவம்பர் 7ம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வை அளித்துள்ளது.
அதன்படி, குடும்பத்தின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்த பெண்களை தாக்கும் ஆண்களுக்கு குறைவான தண்டனைகளே தரப்பட்டது. ஆனால் தற்போது அனைத்து வகையான வன்முறைகளும் ஒரே மாதிரியாக பார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்தொடருதல் மற்றும் வீதிகளில் துன்புறுத்துதல் போன்ற பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளுக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.
அதேபோல், 21 வயதிற்கு மேற்பட்டவர்கள் மது அருந்துவது குற்றம் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் உரிமமின்றி மதுபானம் வைத்திருந்தால், அல்லது விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்ற சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
மதுபானங்களை குடிக்க உரிமம் தேவையில்லை. இருப்பினும், 21 வயதிற்கு குறைவானவர்கள் குடிப்பது தண்டனைக்குரிய செயலாகும். திருமணம் ஆகாதவர்கள் சேர்ந்து வாழ்வது, இனி சட்டப்படி செல்லும்.
மற்றொரு மிகப்பெரிய மாற்றமாக, வேறொரு நாட்டில் திருமணமானவர்கள், அமீரகத்தில் பிரிய விரும்பினால் அந்நாட்டின் சட்டப்படி விவாகரத்து வழங்கப்படும். சொத்து வழக்கில், உள்ளூர் நீதிமன்றங்களில் ஷரியா சட்டப்படி குடும்ப உறுப்பினர்களுக்கு சொத்துகள் பிரித்து தரப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.