தீபாவளி திருடர்கள் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு: கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தி.நகரில் திருடர்களை ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள் என கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.

 

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் பொதுமக்கள் துணிமணிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பெருமளவு கூடுவார்கள். சென்னை, தி.நகர் பகுதியில் அதிகளவு பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் தி.நகர், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, மாம்பலம் ரயில் நிலையம். பாண்டிபஜார் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு பாதுகாப்பு சேவை திட்டங்களை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று துவங்கி வைத்தார்.

அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, ‘‘தி.நகர் மார்க்கெட் பகுதிகளில் ஏற்கனவே உள்ள 200 கேமராக்களுடன் கூடுதலாக 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தவிர்க்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் 2 ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதி செய்ய ஒவ்வொரு கடை வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. வார இறுதி நாட்கள் கூட்ட நெரிசல் அதிகம் என்பதால் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க 500 கூடுதல் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், அண்ணாநகர் ஆகிய பிற மக்கள் கூடும் பகுதிகளிலும் காவல்துறையினர் கூடுதலாக கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது கொரோனா காலம் என்பதால் அரசு அறிவித்த காலை 1 மணி நேரம், மாலை 1 மணி நேரம் தவிர்த்து பட்டாசுகள் வெடிப்பவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’. இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பொதுமக்களுக்கு உதவிட மாம்பலம், பாண்டிபஜார் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த காவல் உதவி மையங்களை கமிஷனர் துவங்கி வைத்தார். இந்த காவல் உதவி மையங்களில் காவல் ஆளிநர்கள் நியமிக்கப்பட்டு அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை கண்காணித்து, குற்றவாளிகளின் நடமாட்டத்தை அவர்கள் கண்காணிப்பார்கள்.

மக்கள் நெரிசல் மிக்க பகுதிகளில் கண்காணிக்க ட்ரோன் கண்காணிப்பு கேமராக்கள், கொரோனா தடுப்பு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ராட்சத பலுான் ஆகியவற்றை ரிமோட் மூலம் துவக்கி வைத்தார். மேலும் பொருட்கள் வாங்க வரும் பெண்களின் கழுத்திலுள்ள தங்க நகைகளை திருடப்படாமல் தடுக்க கழுத்து துணிக் கவசங்களை பெண்களுக்கு வழங்கினார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள், உயர் கண்காணிப்பு கோபுரங்கள், ஆகியவற்றை பார்வையிட்டார். கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள சீருடையில் உள்ள காவல் குழுவினருக்கு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் தினகரன், துணைக்கமிஷனர் ஹரிகிரன் பிரசாத் மற்றும் உதவிக்கமிஷனர்கள். இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!