டைரக்டர் பாக்யராஜ் மகன் சாந்தனு சக்கர கட்டி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தொடந்து சித்து பிளஸ் 2, கண்டேன், அம்மாவின் கைப்பேசி, வாய்மை, வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
விஜய்யின் மாஸ்டர் படத்தில் சாந்தனு சிறிது நேரம் மட்டுமே வந்தார். இதனால் மாஸ்டர் படத்தின் கதாபாத்திரத்தை வைத்து அவரை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கேலி செய்து வந்தனர். அதற்கு சாந்தனு பதில் சொல்லாமல் இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் சிறந்த படங்கள் மற்றும் சிறந்த நடிகர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டபோது மாஸ்டர் படத்துக்காக சாந்தனுவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று மீண்டும் சாந்தனுவை கேலி செய்தனர். இதற்கு பதிலடி கொடுத்து, சாந்தனு டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இன்னொருவரை கேலி செய்வதன் மூலம் ஒருவர் அற்ப சந்தோஷத்தை பெறுகிறார்.
இப்படி கேலி செய்வது எனக்கு சோர்வை தந்து இருக்கிறது. ஆனாலும் என் மீது தெரிந்தோ தெரியாமலோ வீசப்படும் அத்தனை கற்களுக்கும் நன்றி. அது இந்த உலகத்துக்கு ஒரு தகவலை கொடுக்கும். நீங்களே சொல்லி விட்டீர்கள். நடக்காமல் போய்விடுமா. ஒரு நாள் இது நடக்கும். அப்போது எனது சிரிப்பு பதில் சொல்லும்‘’ என்று கூறியுள்ளார்.