தேனி கலெக்டர் அலுவலகத்தில் ரூ.3 கோடியில் புதிய கூட்டரங்கு கட்டும் பணி தொடங்கப்பட்டது.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் குறைதீர்க்கும் கூட்டங்கள், ஆலோசனை கூட்டங்கள், ஆய்வு கூட்டங்கள் போன்றவை நடத்தப்பட்டு வந்தன. தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்படவில்லை.
அரசின் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கும் வகையில் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டங்களை சமூக இடைவெளியுடன் நடத்த கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் போதிய இட வசதி இல்லை.
இதனால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் சில மாதங்களாக கூட்டங்கள் நடந்து வருகின்றன. கொரோனாவின் தாக்கத்தால், இனி வரும் காலங்களிலும் சமூக இடைவெளியுடன் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டங்கள் உள்ளிட்ட கூட்டங்களை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காலியிடத்தில் புதிய கூட்டரங்கு அமைக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து அங்கு ரூ.3 கோடியே 10 லட்சம் மதிப்பில் கூட்டரங்கு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. கட்டுமான பணிகளுக்காக ராட்சத குழிகள் தோண்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சுமார் 1,000 சதுர அடி பரப்பளவில் இந்த கூட்டரங்கு அமைய உள்ளது.