சென்னை, பள்ளிக்கரணை, தரமணி, ஐஸ்அவுஸ் பகுதிகளில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை நகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளிக்கரணை பகுதியில் முன் விரோதம் காரணமாக வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வண்டலுாரைச் சேர்ந்த கார்த்திக் (எ) ஓட்டேரி கார்த்திக் என்பவரை பள்ளிக்கரணை போலீசார் கைது செய்தனர். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் 1 3வயது சிறுமியிடம் தவறாக நடந்து அவரது தற்கொலைக்கு காரணமான பெருங்குடியைச் சேர்ந்த குணசீலன் (33) என்பவரை தரமணி போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். மேலும் சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக
ராயப்பேட்டையைச் சேர்ந்த விமல் (எ) சைக்கோ விமல் (எ) விமலநாதன் என்பவரை ஐஸ்அவுஸ் போலீசார் கைது செய்தனர். ஓட்டேரி கார்த்திக், குணசீலன் மற்றும் சைக்கோ விமல் ஆகியோர் தொடர்ந்து இது போன்று குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க முறையே பள்ளிக்கரணை, தரமணி, ஐஸ்அவுஸ் இன்ஸ்பெக்டர்கள் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரைத்தனர். அதன் பேரில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மூவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.