சென்னை நகரில் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் ஐவர் உள்பட 6 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்த்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை நகரில் குற்றச்சம்பவங்களை தடுத்து குறைக்கும் வகையில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பண மோசடி, பெண்கள் வன்கொடுமை போன்ற குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடும் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் மீண்டும் அந்த குற்றத்தில் ஈடுபடாதபடி ஓராண்டு ஜாமினில் வெளிவரமுடியாதபடி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை நகரில் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கொலை வழக்கில் தொடர்புடைய சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடிகள் ஹரிகிருஷ்ணன் (எ) ஹரியப்பா, வில்சன், ராஜி (எ) தொண்டை ராஜி, ராஜசேகர் (எ) காட்டான் ராஜ், பிரசாந்த் (எ) குள்ள பிரசாந்த் ஆகிய 5 பேர் மீது சென்னை எம்.கே.பி நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. அதே போல பாரிமுனையைச் சேர்ந்த அஜிசுல்கரீம் என்பவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் மோசடி வழக்கு உள்ளது. இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதாகி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 6 பேரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சம்பந்தப்பட்ட சரக இன்ஸ்பெக்டர்கள் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.