தொழிலதிபர்களை குறிவைத்து ரூ. 35 லட்சம் மோசடி செய்த நைஜீரியாவைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜோசப். இவர் ஆன்லைன் மூலம் மெத்தைகள், தலையணைகள் போன்ற பொருட்களை விற்பனை மற்றும் ஏற்றுமதியும் செய்து வருகிறார். இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் தடுப்பு எண்ணெய் கோடிக்கணக்கில் தேவை என்று ஆன்லைனில் வந்த விளம்பரத்தைப் பார்த்து ஜோசப் அந்த எண்ணில் எலிசபெத் என்ற பெண்ணிடம் தொடர்பு கொண்டு பேசினார். அவர் லண்டனில் மருத்துவ குணங்கள் வாய்ந்த பொருட்களை வியாபாரம் செய்வதற்கு உதவுமாறு கேட்டுள்ளார். அதற்கு பெரிய அளவில் கமிஷன் தொகை தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் அவர் கேட்கும் போலிக் ஆயில் எனப்படும் புற்று நோயை குணப்படுத்தும் எண்ணெய் மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் கிடைப்பதாகவும் அதனை வாங்கி தனக்கு அனுப்பும்படியும் எலிசபெத் கூறியுள்ளார்.
அதனை நம்பி ஜோசப் மும்பையில் உள்ள அந்த நிறுவனத்தில் சுனிதா என்பவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 200 லிட்டர் போலிக் ஆயிலுக்கான தொகை ரூ. 35 லட்ச ரூபாயையும் முன்கூட்டியே செலுத்தினால் மட்டுமே பொருட்களை அனுப்ப முடியும் என்ற நிபந்தனையும் இமெயில் மூலம் சுனிதா குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பாக எலிசபெத்திடம் பேசியபோது, 200 லிட்டர் போலிக் ஆயில் வாங்குவதற்கு ஒப்புக் கொண்டார். இதனையடுத்து ஜோசப் ரூ. 35 லட்ச ரூபாய் பணத்தை மும்பை நிறுவனம் கூறிய வங்கிக் கணக்கில் செலுத்தி போலிக் ஆயிலை ஆர்டர் செய்தார். ஆர்டர் செய்து நீண்ட நாட்களாகியும் நிறுவனத்திலிருந்து பொருட்கள் வராததால் சந்தேகம் அடைந்து விசாரணை செய்ததில் சுனிதா என்ற பெண்ணும் மற்றும் மும்பை நிறுவனமும் போலி என தெரியவந்தது. எலிசபெத் செல்நம்பரும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து ஜோசப் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அந்தேரியில் பதுங்கியிருந்த நைஜீரியா வாலிபர் புல்ஜன் குவாடியோ கிரிஸ்டோபர் வில்மர் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விமானம் மூலம் தனிப்படை போலீசார் அவரை சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.