டிவி நடிகை சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என ஆர்டிஓ 16 பக்க விசாரனை அறிக்கையை போலீசாரிடம் தாக்கல் செய்து உள்ளனர்.
டிவி நடிகை சித்ரா, கடந்த 9-ம் தேதி பூந்தமல்லி அருகே பழஞ்சூர் தனியார் நட்சத்திர ஓட்டலில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையின் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கடந்த 14-ம் தேதி கைது செய்தனர். பின்னர் இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ கடந்த 14ஆம் தேதி முதல் விசாரணையில் ஈடுபட்டு வந்தார்.
முதல் நாள் விசாரணையில் சித்ராவின் பெற்றோர், சகோதரி, சகோதரர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, ஹேம்நாத்தின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்தினார். சித்ராவுடன் டிவி சீரியலில் நடித்த நடிகர்– நடிகைகள், சித்ரா மற்றும் ஹேம்நாத் ஆகியோரின் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் உள்பட 15 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.
ஆர்டிஓ திவ்யஸ்ரீ தனது விசாரணை அறிக்கையை பூவிருந்தவல்லி உதவி ஆணையர் சுதர்சனத்திடம் ஒப்படைத்தார் விசாரணை அறிக்கையில் வரதட்சணை கொடுமையால் சித்ரா தற்கொலை செய்யவில்லை என கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.