நடிகை சித்ரா மரணம்- தொடர்பாக தயார் நிலையில் ஆர்டிஓ அறிக்கை

நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஆர்டிஓ விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில் சுமார் 300 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஆர்டிஓ அதிகாரிகள் தயார் செய்து அதனை போலீசில் ஒப்படைக்கவுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியல் நடிகை சித்ரா, பூந்தமல்லி அருகே உள்ள விடுதியில் கடந்த 9ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அது தொடர்பாக சென்னை நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சித்ராவின் தாய் அளித்த புகாரின் பேரில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 14ம் தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். நடிகை சித்ரா தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணை நடத்தி வருகிறார். சித்ராவின் பெற்றோர், சகோதரி, சகோதரர் மற்றும் ஹேம்நாத்தின் தாய், தந்தை ஆகியோரிடம் 4 கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சித்ரா தங்கியிருந்த ஓட்டல் அறை ஊழியர்கள், சித்ராவுடன் கடைசியாக சூட்டிங்கில் கலந்து கொண்டவர்கள், வீட்டின் அருகில் வசிப்பார்கள் மற்றும் நெருக்கமானவர்கள் என இதுவரை 16 பேரிடம் ஆர்டிஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்தி உள்ளார். இந்த விசாரணையில் சுமார் 250 முதல் 300 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணை அறிக்கை 29ம் தேதியன்று பூந்தமல்லி போலீஸ் உதவி கமி‌ஷனர் சுதர்சனத்திடம் வழங்க ஆர்டிஓ திவ்யஸ்ரீ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த அறிக்கை முடிவை வைத்து அடுத்த கட்ட விசாரணையை போலீசார் தொடங்குவார்கள். அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை பாயும் என தெரிகிறது. இந்நிலையில் சித்ராவின் 16ம் நாள் நினைவஞ்சலி நிகழ்ச்சி கோட்டூர்புரத்தில் உள்ள அவரது பெற்றோர் வசிக்கும் காவலர் குடியிருப்பில் நேற்று நடந்தது.

Translate »
error: Content is protected !!