கோவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. அதன் பின்னர் தொற்று கட்டுக்குள் வராததால், படிப்படியாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது.
அதேநேரம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டியும், மக்களின் வாழ்வாதாரம் கருதியும், படிப்படியான தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்து வருகிறது. பாதிப்புகள் அதிகம் உள்ள மாநிலங்களில், தொற்றின் தாக்கத்தை அடிப்படையாக வைத்து தளர்வுகளை அறிவிக்க அனுமதியளிக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் கோவிட் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதி வரை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 6ம் கட்ட தளர்வுகளே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்திற்கான தடை நீக்கப்படுவதாகவும், வேறு மாநிலங்கள் செல்ல இபாஸ் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.