நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதால் தடையை மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா 2வது அலை தமிழகத்தையே மிரட்டி வருவதை ஒட்டி தடுப்பு நடவடிக்கையாக நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை நகர காவல்துறை அதற்குறிய பாதுகாப்பு நடவடிக்கையில் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். பொதுமக்களை வௌியில் வராத வண்ணம் கட்டுப்படுத்துவதற்கு சென்னை நகரில் மொத்தம் 25 ஆயிரம் போலீசார் காவல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், 12 காவல் மாவட்டங்களில்
320 வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப் படவுள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா முழு ஊரடங்கை மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், ஒரு வாரத்துக்கு பிறகே வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று சென்னை நகர காவல்துறை சார்பில் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரே வாகனம் மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டால் அந்த வாகனம் திரும்ப ஒப்படைக்கப்படாது. கோர்ட்டு மூலமாகவே அவற்றை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்’’ எனவும் சென்னை நகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி பொருட்கள் வீடுதேடி விற்பனை செய்யப்படவுள்ளதால் அத்துமீறி வௌியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனம் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.