பள்ளி திறந்ததால் விபரீதம்… 10 லட்சம் குழந்தைகளுக்கு கொரோனா!

பள்ளிகள் திறக்கப்பட்டதால், அமெரிக்காவில் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்தாண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்துவிட்டது. கொரோனா பரவத் தொடங்கியதும் பல்வேறு உலக நாடுகளும் ஊரடங்கை அமல் செய்து, பின்னர் பாதிப்புக்கு ஏற்றவாறு தளர்வுகளை அறிவித்தன.

கொரோனா பாதிப்பில் உலகளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழலில், கொரோனாவுக்கு மத்தியில் பள்ளியை திறந்ததால், அமெரிக்காவில் 10 லட்சம் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவ அமைப்பு கூறுகையில், அமெரிக்காவில் கோவிட்19 தொற்றுக்கு இதுவரை சுமார் 10,39,464 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்தியா உள்பட உலக நாடுகள் பலவும், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்காவை சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து மூன்றாம் கட்டப் பரிசோதனையில் 90 சதவீதம் பலன் அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!