வாஷிங்டன்,
அமெரிக்காவை பாதுகாப்பாகவும் வளமாகவும் வைத்திருப்பதில் ஜோ பைடன் வெற்றி பெற வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்வதாக இன்றுடன் விடைபெறும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பிரியாவிடை வீடியோவில் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் தோல்வியை தழுவினார். அதேநேரம் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இன்று அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.
முன்னதாக ஜோ பைடனின் வெற்றியை ஏற்காமல் மோசடி செய்து வாங்கப்பட்ட வெற்றி என்று டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார். நீதிமன்றங்களையும் நாடினார். ஆனால் ஆதாரங்கள் இல்லாததால் அவை அனைத்தும் தள்ளுபடியாகின.
இதற்கிடையே டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தை தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையானது. அதன்பின்னர் டிரம்ப் அமைதியானர். அதிகார மாற்றத்திற்கு ஒப்புக்கொண்டார். இன்று அவர் விடைபெறுகிறார்.
இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்குமேல் ஜோ பைடன் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்கிறார். இன்று அதிபராக பதவி வகிக்கும் கடைசி நாள் என்பதால் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் டிரம்ப். அந்த வீடியோவில், இவ்வளவு நாள் அமெரிக்காவின் அதிபராக பணியாற்றியதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்.
இந்த வாரம், புதிய நிர்வாகம் தனது பணிகளை துவங்குகிறது. அந்த நிர்வாகம் அமெரிக்காவை பாதுகாப்பாகவும் வளமாகவும் வைத்திருக்க வேண்டும். அந்த நிர்வாகத்தின் வெற்றிக்காக பிரார்த்திக்கிறேன்.
புதிய நிர்வாகத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக முக்கியமான விஷயம் அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். முன்னெப்போதையும் விட, அமெரிக்கர்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இதன் மூலம் பாகுபாடு அற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும்” என்று டிரம்ப் கூறியுள்ளார்.