நிவர் புயல் அச்சுறுத்தலை தொடர்ந்து புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின் விளக்குகள் நகராட்சியின் மூலம் கீழே இறக்கப்பட்டது.
நிவர் புயல் இன்று கரையைக் கடக்கும் என்பதால் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்று மற்றும் மழை அதிகளவில் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த கஜா புயலின் போது புதுக்கோட்டையில் மரங்களும் உயர்மின் கோபுர விளக்குகளும் சாய்ந்து பெரும் சேதம் அடைந்தன. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் தென்னை மரங்களில் உள்ள மட்டைகளை வெட்டி மொட்டையடித்து மரங்களை பாதுகாத்து வருகின்றனர். அதேபோல் வீடுகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டியும் வீட்டின் மேற்கூரையில் கனமான தார்பாய்களை போட்டும் பொதுமக்கள் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சி சார்பில் நகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின் கம்பங்களில் இருந்து விளக்குகள் நேற்று கீழே இறக்கப்பட்டன. நிவர் புயல் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக அப்பகுதிக்குச் செல்ல தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.