சென்னை நகரில் புத்தாண்டு இரவு மெரீனா கடற்கரைச்சாலைகள் முழுவதுமாக மூடப்பட்டு வாகனங்கள் செல்லத்தடை விதிக்கப்படும் என்று எஎன போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
அது தொடர்பாக கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது,
‘புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவோம். சென்னையில் உள்ள கடற்கரை சாலைகளுக்குள் யாரும் நுழையாதபடி தடுப்புகள் அமைக்கப்படும். சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் யாரும் ஈடுபடக்கூடாது. அதற்கு அனுமதி இல்லை. முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்களில் கும்பலாக வரக்கூடாது. மீறி வந்தால் தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய உள்ளோம். சென்னை முழுவதும் முழுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்படும். பொதுமக்கள் வீடுகளிலேயே குடும்பத்தினரோடு சேர்ந்து புத்தாண்டை கொண்டாடுங்கள். மெரினா கடற்கரை சாலை உள்பட கடற்கரை சாலைகளில் முழுவதுமாக மூடப்படும். யாருக்கும் அனுமதி இல்லை. சென்னை காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு சென்னை மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மேலும் போலி நீட் சான்றிதழ் வழக்கு எந்த பிரிவிற்கும் மாற்றவேண்டிய அவசியம் இல்லை. பெரியமேடு போலீசாரே விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கிறிஸ்துமஸ் நேரத்தில் கிறிஸ்துவ தேவாலயங்களில் இரவில் வழிபாடு கூட்டம் நடத்த காவல்துறையிடம் முன்கூட்டி அனுமதி பெற வேண்டும். கூட்டம் நடக்க உள்ள தேவாலயம் எங்கு இருக்கிறது? எவ்வளவு பேர் வருவார்கள்? என்பது தொடர்பாக காவல்துறையினர் ஆய்வு செய்த பிறகு அனுமதி வழங்கப்படும். அனுமதி இல்லாமல் நடத்தக்கூடாது. புத்தாண்டு தின இரவு நேர கோவில்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதிப்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறையிடம் ஆலோசித்து தான் முடிவு செய்யப்படும். தமிழகத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.