நிவர் புயல், சென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவில் நிவர் புயல் நிலைகொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் நிலவரம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று மாலை தெரிவித்ததாவது:
நிவர் புயலானது சென்னையில் இருந்து 420 கி.மீ தொலைவிலும் புதுவையில் இருந்து 370 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. நாளை மாலை அதி தீவிர புயலாக நிவர் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிவர் புயலானது பிற்பகலில் பலமணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தது; பின்னர், தற்போது மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகருகிறது. வடக்கு-வடமேற்கு நோக்கி தற்போது நகர்ந்து வரும் நிவர் புயல், வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளது.
எனவே, தமிழகம், புதுவை, ஆந்திரப்பிரதேசத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படும். வழக்கத்தை விட அலைகள் 14 அடி உயரம் எழும்பும்.
எனினும், கஜா புயலைவிட நிவர் புயல் தாக்கம் சற்றுக் குறைவாக இருக்கும். அதே நேரம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (25ம் தேதி) மிக கனமழை பெய்யும் என்றார்.
இதற்கிடையே, நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் வட பகுதி கடலோரங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. விழுப்புரத்தில் கடல் அரிப்பு காரணமாக 5 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. பொம்மையார்பாளையத்தில், கடல் நீர் ஊருக்கு உள்ளே 20 அடி புகுந்ததாக, செய்திகள் தெரிவிக்கின்றன.